Monday, 7 October 2013

தொல்காப்பியத்தில் காதல்

தொல்காப்பியர் களவியல், கற்பியல்
இரண்டு பகுதிகளிலும்
காதலைப்பற்றி மிகுதியாக
கூறுகிறார். இரண்டிலும்
உணர்ச்சிவழி செயல்பாடுகளைக்
கூறுகிறார். எனினும்
அச்செயல்பாடுகள்
அறிவு வழி செயல்பாடுகளாக
மாறிவிடுவதையும் காட்டிச்
செல்கிறார். அதனால் தொல்காப்பியர்
காலத்துக் காதலர்கள் எல்லாம்
உணர்வழி அகற்றி,
அறிவு வழி காதலித்தனர் என்றால்
அது நகைப்பிற்கு இடமாகும்.
உணர்வுவழி காதலர்களாகும்
ஆணும், பெண்ணும்
திருமணத்திற்கு பின்னும்
காதலர்களாக இருக்க
அறிவுவழி செயல்பட வேண்டும்
என்ற விருப்பத்தையே களவியல்,
கற்பியல் ஆகிய பகுதிகளில்
கூறுகிறார்
என்பது கட்டுரையாளரின் கருத்து.
கம்பன் கொடுப்பாரும், கொள்வாரும்
இன்றி எல்லா வளமும் எல்லாரும்
பெற்று வாழவேண்டும் எனத் தான்
விரும்பிய
சமுதாயத்தை அயோத்தி சமுதாயமாகப்
படைத்துக்காட்டினான் என்பர்.
அதுபோல காதலர்கள் களவிலும்,
கற்பிலும் செயல்படவேண்டிய தன்
விருப்பங்கள் தொல்காப்பியர்
தொல்காப்பியத்தில்
படைத்துக்காட்டுகின்றார்.
தெய்வம் கூட்டவோ,
அல்லது விதி வழியாகவோ ஆணும்
, பெண்ணும் எதிர்பாராத விதமாகச்
சந்தித்துக் கொள்கின்றனர்.
இச்சந்திப்பு அவர்களின் மனதில்
ஒரு தாக்கத்தை ஏற்படுத்துகின்றது.
பார்க்கின்ற எல்லா ஆண்
அல்லது பெண்ணால் தாக்கம்
ஏற்படுவதாகக் குறிக்கப்படவில்லை.
பிறப்பு, குடிமை, ஆண்மை,
ஆண்டு, உறவு, அன்பு, நிறை,
அருள், உணர்வு, திரு ஆகிய
பத்து ஆளுமைக்குணங்கள்
ஒன்றுபட்டிருக்கும். ஆணும்
பெண்ணும்
எதிர்படும்பொழுது இத்தாக்கம்
ஏற்பட்டுப் பின் அது குறிப்பால்
ஒருவர் எண்ணத்தை ஒருவர்
அறிந்தபின் காதலாக மாறுவது நலம்
என்பது தொல்காப்பியர் கருத்து.
தமிழ்ச் சமுதாயம் தொல்காப்பியர்
காலத்திலேயே ஆணாதிக்கச்
சமுதாயமாக இருந்துள்ளது.
எனவே மேற்கூறிய
பத்து ஆளுமைகள் சிலவற்றில்
மிக்கோனாக ஆண் மகன்
இருப்பினும் எனக் கூறுகிறார்.
இன்றைய வாழ்விலும் இவ்
ஆளுமைகள்
ஒத்து இருக்குமேயானால்
இவ்வாழ்க்கையில் உரசல்கள்
தவிர்க்கப்படுவது உறுதி.
எனினும், இக்குணங்கள் ஒத்தில்லாத
தம்பதியர் ஒத்து வாழ்வதையும்,
இன்றைய நாளில் காண முடிகிறது.
தொல்காப்பியர் காதல் வயப்படும்
ஆணும், பெண்ணும்
அறிவுவழி செல்ல வேண்டும்
என்பதை அவர்களின் முதல்
சந்திப்பிலேயே எச்சரித்து விடுகிறா
ர். மேற்கூறிய பத்து ஆளுமைகள்
பெரும்பான்மை ஒத்து இல்லாவிட்டால்
அது பிரிவுக்கு வழி வகுக்கும்
என்பதே அவர் கருத்து என
அறியப்படுகிறது.
சந்தித்த ஆணும், பெண்ணும் காதல்
வயப்பட்ட பின்பு ஒருவர்
விருப்பத்தை இன்னொருவர்
புரிந்து கொள்ளுதல் அவசியம்.
ஆனால் இதற்கு வாய் வார்த்தைகள்
தேவையில்லை. கண் என்னும்
ஊடகத்தின் வாயிலாகக்
கருத்தை சொல்பவர் கேட்போரிடம்
எவ்வகைத்
தடங்கலுமின்றி தெரிவித்திட
முடியும் என்கின்றார்
தொல்காப்பியர்.
நாட்டம் இரண்டும் அறிவுடம்
படுத்தற்குக்
கூட்டி யுரைக்கும்
குறிப்புரையாகும்
பத்துக் குணங்களின் ஒன்றாகிய
அறிவால் ஒத்த ஆண் பெண்ணால்
தான் பிறர் அறியாமல்,
வாய்மொழி இல்லாமல் உள்ளக்
கருத்தை ஒருவருக்கொருவர்
தெளிவாக உணர்த்த முடியும்
என்பது தொல்காப்பியர் எண்ணம்.
ஆணுக்கும், பெண்ணுக்கும்
பொதுவான பத்து ஆளுமைக்
குணங்களைக் கூறிய
தொல்காப்பியர் பெருமையும்,
உரனும் ஆணுக்குத் தேவையான
கூடுதல் ஆளுமைப் பண்புகளாகக்
குறிப்பிடுகிறார்.
பெருமையும் உரனும் ஆடுஉ மேன
அறிவு, ஆற்றல், புகழ், கொடை,
ஆராய்தல், நல்லொழுக்கம், நட்பு,
பழி பாவம் அஞ்சுதல்
ஆகியவை பெருமைக்கும்,
பிடிப்பான கொள்கை, கலங்காத
துணிவு உரனுக்கும் பொருளாகக்
கூறப்படுகிறது.
ஆண்மகன் இல்லறத் தலைவனாகிற
அதே நேரத்தில் சமுதாய
நடவடிக்கைகளிலும்
பங்கு கொள்கிறான். இல்லறம்,
சமுதாயம் இரண்டிலும் அறிவும்,
நற்குணங்களும், கொள்கைப்
பிடிப்பும் முடிவெடுக்கும்
துணிச்சலும் அவசியம் என்பதைத்
தொல்காப்பியர் குறிப்பிடுகிறார்.
அதேபோல் வீட்டில் மட்டும்
தலைமை ஏற்கும்
பெண்ணுக்கு அவர்கால
வழக்கப்படி சில ஆளுமைப்
பண்புகளைக் குறிப்பிடுகிறார்.
அச்சமும், நாணமும், மடனும்
முந்துறுத்த
நிச்சமும் பெண்பாற்குரிய
என்கிறார். இக்காலப்
பார்வைப்படி இச்சொற்கள்
பெண்ணடிமைத்தனத்தின்
செயல்பாடு என்றாலும், அக்காலச்
சமுதாய அமைப்பை நமக்குக்
கிடைத்திருக்கக் கூடிய இலக்சியச்
சான்றுகள் கொண்டு எண்ணிப் பார்க்க
வேண்டும். மன்னர்கள் ஆட்சியின்
கீழ் பரப்பரப்பற்ற - போட்டிகள்
குறைந்த தேவைகள் குறைந்த -
வேளாண்மை சிறுதொழில்கள்
மட்டுமே உள்ள மனிதப் பண்புகள்
நிறைந்த - மாறுபட்ட சிந்தனைகள்
இல்லாத சமுதாயமாக இருந்த
காரணங்களினால் பெண்களின்
பங்களிப்பு சமுதாயத்திற்கு தேவைப்
படாத காலமாய் இருந்தது. அதனால்
பெண்ணின்
வாழ்க்கை இல்லறத்திற்குள்ளேயே நிற
ைவு பெற்றது. அதனால்
தொல்காப்பியர் காலப்பெண் அச்சம்,
நாணம், மடம்
நிறைந்தவளாகவே இருந்திருப்பாள்.
ஆயினும் அறிவு நிரம்பப்பட்டவள்
என்பதை உணர்த்துகிறார்
தொல்காப்பியர்.
காதல் வயப்பட்ட ஆணும், பெண்ணும்
தனித்திருந்த தங்கள்
காதலை வெளிப்படுத்துகின்ற
தருணத்தில் பெண் தன்னுடைய
வேட்கையைத் தன் காதலனிடம்
கூறமாட்டாள். காதலியின் அக
உணர்வைப் புரிந்து கொண்ட
காதலன் அவளிடம் கேட்கும்
பொழுது கூட அதைத்
தன்வார்த்தைகளால்
கூறாது புதுமண்கலத்தில்
ஊற்றப்பட்ட
நீரானது புறத்தே கசிவது போல தன்
குறிப்பால் வெளிப்படுத்துவாள்
என்கின்றார். தனித்திருக்கும்
வேளையிலும் தன்
புலன்களை அடக்கும் ஆளுமைப்
பண்புகொண்ட அறிவுசால்
பெண்ணின்
தலைமை இல்லறத்தை இனிது நடத்தும்
என்பதை தொல்காப்பியர்
புலப்படுத்துகிறார். காதல்
வயப்பட்ட பெண் வரம்புக்
கடக்காதவளாக இருத்தல் நலம்
என்பதையும் சுட்டிக் காட்டுகிறார்.
காதலனும், காதலியும் பழகும்
காலத்தில் யாருக்கும் தெரியாமல்
சந்திக்கும் இடத்தைப் பெண்தான்
தீர்மானிக்கிறாள். காரணம் தனக்குப்
பாதுகாப்பாகவும், தங்கள் காதல்
குறிப்பிட்ட காலம் வரை பிறர்க்குத்
தெரியாமல் இருப்பதே நலம்
என்று கருதியும் காதலி சந்திக்கும்
இடத்தைத் தேர்ந்தெடுக்கும்
பொறுப்பை ஏற்றுக்கொள்கிறார்.
ஆண் மகன் வரம்பு மீறினால்
அதுகூட
அவளுக்கு அறமில்லை என்ற
காரணமும் இப்பொறுப்பை அவள்
ஏற்கச் செய்கிறது.
அவன் வரம்பிறத்தல்
அறந்தனக்கின்மையின்
களம் சுட்டும்
கிளவி கிளவியதாகும்
தான் செலற்குரிய வழியாகலான
என களவுக் காலத்திலும்
பெண்உணர்வுவழி ஒதுக்கி அறிவுவ
ழிச் செல்ல வேண்டுமென
விரும்புகிறார்.
திருமணத்திற்கு பின்
பெண்ணுக்கு சில கூடுதல்
பொறுப்புகள் அவசியம்
என்கின்றார்.
கற்பும் காமமும் நற்பால் ஒழுக்கமும்
மெல்லியற் பொறையும் நிறையும்
வல்லிதின்
விருந்து புறந்தருதலும் சுற்றம்
ஓம்பலும்
பிறவும் அன்ன கிழவோள்
மாண்புகள்
என்கின்றார். அறிவு முதலான
பத்து ஆளுமைக்களைக் கொண்ட
பெண்ணால்தான் எப்படிப்பட்டச்
சூழலிலும் ஆணின்
அன்பு மாறுபட்டு சென்ற காலத்தும்,
கற்பு, காமம், ஒழுக்கம், மென்மை,
பொறை, நிறை, விருந்து, சுற்றம்
காக்க முடியும் என்பது காப்பியர்
கருத்து. பெண்ணுக்கு மேலும் சில
கூடுதல் பண்புகளைக் கூறுகிறார்.
தாய்போல் கழறித் தழீஇக் கோடல்
ஆய்மனைக்கிழத்திக்கும் உரித்தென
மொழிப
அதுபோல் தலைவனின்
புகழுக்கு இழுக்கு வராமல்
நடந்து கொள்ளுதலையும்
வலியுறுத்துகிறார். கணவன்
தன்னோடு ஒத்த சிறப்புகள்
அல்லது மிக்க சிறப்புகள்
கொண்டவனாயிருப்பினும் பெண்
அவனிடம் தன்னைப்
புகழ்ந்து கூறுதலைத்
தவிர்த்து விடுதல் அவசியம்
என்கின்றார்.
தற்புகழ் கிழவி கிழவன்முன்
கிளத்தல்
எத்திறத்தானும் கிழத்திக்கில்லை
இவ்விடத்தில் தொல்காப்பியர்
ஆணின் உளவியலை ஆண்
வழி நின்று விளக்குகிறார். மிக்க
அன்புடையவனாக இருப்பினும்
மனைவி உண்மையிலேயே தன்னைவி
ட உயர்ந்தவளாக இருந்தாலும்
ஆண்மனம் அதை ஏற்றுக் கொள்ளாது.
மாறாக,
எதிர்ச்செயல்களை விளைவிக்கும்
என்பதை சமுதாயம்
வழி நின்று விளக்குகிறார்.
இச்சமுதாயம் பெண்ணைவிட
ஆணே உயர்ந்தவன் என்ற
கருத்துடையது.
அக்கருத்தே ஆண்மகன்
எண்ணத்திலும் ஊறியிருக்கும்.
எனவே குடும்பத்தில் இலக்கணம்
குறைய வாய்ப்புள்ளது என்பதால்
அதைத் தவிர்க்க
அறிவுறுத்துகிறார்.
தொல்காப்பியர் ஆணாதிக்கச்
சமுதாயத்தைச் சார்ந்தவர். அக்காலச்
சமுதாயத்தில் தோன்றிய ஆண்
பெண்ணுக்கு இடையே ஏற்படும்
காதலைக் கூறுகிறார். இல்லறத்தில்
கணவன் மனைவியாக
நுழையப்போகும் களவியல் காதலன்
காதலிக்குத் தேவையான
பத்து ஆளுமைப் பண்புகளைக்
குறிப்பிட்டு களவு கற்பு இருகாலத்த
ிலும் உணர்ச்சிவழிக்
காதலை அறிவுவழிச் செலுத்தினால்
நல்ல இல்லறத் தலைவர்களாக
முடியும் என்கின்றார். பொதுவான
ஆளுமைப் பண்புகளைக்
குறிப்பிட்டு இருவருக்கும்
தேவையான தனிச்சிறப்பு ஆளுமைப்
பண்புகளையும்
குறிப்பிட்டு பெண்ணுக்கு தேவையா
ன கூடுதல் பொறுப்புகளையும்
சுட்டிக்காட்டுகிறார். அவர்
குறிப்பிட்ட குணநலன்களை உடைய
ஆணும், பெண்ணும் வீட்டுக்கும்
நாட்டுக்கும் தேவை என்னும் தன்
விருப்பத்தை களவியல், கற்பியல்
ஆண் பெண் மீது ஏற்றிக் கூறுகிறார்.
இப்பண்புகளை உடையோரின் காதல்
வாழ்க்கை சிறக்கும்
என்பது தொல்காப்பியரின் கருத்து.

நன்றி: தொல்காப்பியம் பொருளும்
வாழ்வியலும்

No comments:

Post a Comment